tamilnadu

img

படுகொலையைத் தற்கொலையாக்கும் தற்குறிகள்....

====கண்ணோட்டம்===

காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?’  எனும் சர்ச்சையான கேள்வியை குஜராத் மாநிலத்தில் பள்ளிமாணவர்களிடையே தேர்வின்போது கேட்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குஜராத்தில், `சுவலாம் சஹாலா விகாஸ் சங்குல்’ என்ற அமைப்பின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு தேர்வு நடைபெற்றுள்ளது. இதில், `காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. 

சுவலாம் சஹாலா விகாஸ் சங்குல் என்பது காந்திநகரில் அரசு மானியங்களைப் பெறும் சில சுயநிதிப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அமைப்பாகும். அதேபோல, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், `உங்கள் பகுதியில் மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்தும், கள்ளச்சாராய விற்பனை குறித்து புகார் கடிதம் ஒன்றை காவல்துறை மேலதிகாரிக்கு எழுதவும் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இது குஜராத் மாநில கல்வி அதிகாரிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் வதேர் பிடிஐக்கு அளித்த பேட்டியில், ``அந்தப் பள்ளிகளில் சனிக்கிழமை நடந்த அகமதிப்பீட்டு தேர்வில் மோசமான வினாக்கள் கேட்கப்படிருக்கின்றன. இந்த கேள்விகள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அறிக்கை கிடைக்கப்பெற்றதும், நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த கேள்வித்தாள், `சுவலாம் சஹாலா விகாஸ் சங்குல்’ அமைப்பின் நிர்வாகத்தினர் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கும் மாநில கல்வித்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இதை எளிதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அரசின் நிதியுதவி பெற்று இயங்கும் தனியார் பள்ளி ஆயினும் வரையறையின்றி எதை வேண்டுமானாலும் பாடமாக வைத்துக் கொள்ளலாம். எதை வேண்டுமானாலும் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சாக விதைக்கலாமெனின் அதற்கு அரசெதற்கு? இதற்கும் மாநில பள்ளிக் கல்வித் துறைக்கும் தொடர்பில்லை என எப்படிக் கூற முடியும்? மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மண்ணிலேயே  அவருக்கு இழைக்கப்படும் அநீதியைப் பொறுத்துக் கொள்ள உண்மையாக காந்தியை நேசிப்பவர்களால் இயலாது. நாங்களும் காந்திக்கு 150 வது பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஆண்டு முழுவதும் தேசந் தழுவிய அளவில் கொண்டாடுகிறோம் என பசப்புவார்கள் பாஜகவினர். இவர்கள் ஏற்கனவே  அரசின் பாடப் புத்தகத்திலேயே மகாத்மா காந்தியின் படுகொலையை இயல்பான இறப்பாக சித்தரித்ததிலிருந்து குரூர குயுக்தி முகம் கிழிந்து தொங்குகிறது. எனின் மகாத்மா காந்தியின் படுகொலையைத் தற்கொலையாகச் சித்தரித்து பள்ளி மாணவர்களைக் கேள்வி கேட்டிருப்பது குறித்து குஜராத் மாநில பா.ஜ.க. அரசு பதறிப்போய் அதற்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.

அவ்வாறு மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசு தலையிட்டு மாநில அரசை நடவடிக்கை எடுக்க வைக்கும் எனவும் எதிர்பார்க்க முடியாது. கடந்த ஜனவரி 30 அன்று மீண்டும் மகாத்மா கொல்லப்பட்டதை நாடே கண்டது. சங்பரிவார கும்பல் காந்தியின் படத்தை நிற்க வைத்துத் துப்பாக்கியால் சுட்டெரித்து கோட்சேவுக்கு வாழ்க முழக்கமிட்ட காட்சியை உலகம் முழுக்க ஒலி ஒளி பரப்பியது பாசிசத் தன்மையிலானது. இந்நிகழ்விற்கு பா.ஜ.க.வோ பாரதப் பிரதமரோ  வருத்தப்படவுமில்லை. கண்டிக்கவுமில்லை. பிறகெப்படி இவர்களிடம் நடவடிக்கையை நாம் எதிர்பார்க்க முடியும்?உலகம் போற்றும் உத்தமர் காந்திதான் இந்தியாவின் தேசத் தந்தை. இதுவும் உலகறிந்த உண்மை. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஹூஸ்டனில் பிரதமர் நரேந்திரமோடியின் வருகையின்போது  தமக்கான தேர்தல் பிரச்சாரகராக மாறிய மோடியை மகிழ்விக்க இந்தியாவின் தந்தை நரேந்திரமோடி எனப் புகழாரம் சூட்டியதையும் அதை மோடி உள்ளூர மகிழ்ந்து மறுப்பேதும் தெரிவிக்காமல்  நாடகமாடியதையும் அதற்குள்ளாகவா நாம் மறக்க முடியும்?மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசப் பற்றாளர் எனப் புகழ்வதும் கோட்சேவுக்கு சிலை வைப்பதும் என தங்களின் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தி வரும் பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரங்கள் ‘மகாத்மா தற்கொலை’ எனும் துருப்புச் சீட்டைக் கையிலெடுத்துள்ளன. கோயபல்ஸ் பாணியில் இதையே உண்மையாக்கி பாடப்புத்தகங்களில் பாடமாக்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மாணவர்களுக்குக் கேள்வி கேட்டாயிற்று. அடுத்துசெருப்புக்கேற்ப காலை வெட்டும் உத்தி தானே.‘மதுவிலக்கு’ மாநிலமான குஜராத்தில் கள்ளச்சாராயம் குறித்து கேள்வி கேட்டிருப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல்தான் உள்ளது.

====பெரணமல்லூர் சேகரன்====

;